Wednesday, February 22, 2012

குரான் எரிப்பு:ஆப்கானில் அமெரிக்காவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்



ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்க இராணுவத் துருப்பினர் ஒரு இராணுவ முகாமில் தவறுதலாக இஸ்லாமிய புனித நூல்களை எரித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் தலைநகர் காபூல் மற்றும் நாட்டின் கிழக்குப் பகுதி நகரமான ஜலாலாபாத் ஆகிய நகரங்களில் அமெரிக்க எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெறுகின்றன.
இதில் ஆப்கானிய காவல்துறையைச் சேர்ந்த நால்வர் உட்பட குறைந்தது பத்துபேர் காயமடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
காபூலின் கிழக்குப் பகுதியிலிருக்கும் ஒரு அமெரிக்க படைத்தளத்தின் முன்னர் குவிந்த கோபாவேசமான ஆர்ப்பாட்டக் கூட்டத்தினர் அமெரிக்கா ஒழிக, ஒபாமா ஒழிக போன்ற கோஷங்களை எழுப்பி அந்த படைத்தளத்தின் மீது கற்களை எறிந்துள்ளனர்.
பாதுகாப்பு படையினர் வானத்தை நோக்கிச் சுட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகிறார்கள். வாகனங்களும் சேதமடைந்ததாக செய்திகள் கூறுகின்றன.
ஜலாலாபாதில் கூடுதல் வன்முறையுடன் அமெரிக்க எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெறுவதாக தகவல்கள் வரும் நிலையில், போராட்டக்காரகள் காபூலில் இருந்து ஜலாலபாதுக்கு போகும் பாதையை மறித்துள்ளனர்.
அங்கு தாலிபான்களுக்கு ஆதரவான கோஷங்களை மக்கள் எழுப்பியுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
தாங்களால் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட குரான் உட்பட புத்தகங்களை எரித்ததற்காக அமெரிக்க இராணுவம் உடனடியாக மன்னிப்பு கோரியது.
அந்தப் புத்தகங்கள் மூலம் தமக்கிடையே தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் செய்திகளை பரிமாறிக் கொண்டனர் என்று அமெரிக்கர்கள் நம்பியுள்ளனர்.
இதற்கு முன்னர் இடம்பெற்ற சில சம்பவங்களில் அமெரிக்கர்கள் இஸ்லாம் மதத்தை இழிவு படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், குரானை எரிக்க அமெரிக்கப் படையினர் எப்படி அனுமதிக்கப்பட்டிருக்கக் கூடும் என்பதை பல ஆப்கானியர்கள் ஏற்றுக் கொள்ள முடியாமல் இருக்கிறார்கள்.

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets