Friday, February 24, 2012

தந்தங்களுக்காக கேமரூனில் 458 யானைகள் கொலை


கேமரூன் நாட்டின் வடபகுதியில் இதுவரை இல்லாத வகையில் தந்தங்களுக்காக, கடந்த சில வாரங்களில் மட்டும் நூற்றுக்கணக்கான யானைகளை துப்பாக்கிதாரிகள் கொன்றுள்ளதாக அந்நாட்டின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னர் எண்ணியிருந்ததை விட இந்த எண்ணிக்கை மிகவும் அதிகம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அண்மைய வாரங்களில் மட்டும் 458 யானைகளின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அங்குள்ள பௌபா இன்ஜெடா தேசிய வன்விலங்கு சரணாலயத்தின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.
தந்தங்களுக்காக மத்திய ஆப்ரிகாவில் யானைகள் கொல்லப்படுவது சாதாரமான ஒரு விஷயம்தான். ஆனால் இவ்வளவு குறுகிய காலப்பகுதியில் இந்த அளவுக்கு யானைகள் கொல்லப்படுவதை தாங்கள் இதுவரை பார்த்தது இல்லை என்று பிராணிகள் நல அமைப்பினர் தெரிவிக்கிறார்கள்.
தற்போது கேமரூனின் வடபகுதியில் வறண்ட வாநிலை நிலவும் காலம் என்பதால், வேட்டைக்காரர்களுக்கு யானைகளை கொல்வதற்கு சரியான நேரமாக அமைந்துள்ளது.
மேலும் அண்டை நாடுகளில் இருக்கும் யானைகளின் எண்ணிக்கை கடந்த சில வருடங்களாக குறிப்பிடத்தகுந்த அளவுக்கு குறைந்துள்ளதால், வேட்டைக்காரர்களின் கவனம் கேமரூன் நாட்டிலுள்ள இந்த இன்ஜெடா சரணாலயத்தின் பக்கம் திரும்பியுள்ளது.
இதற்கு சூடான் மற்றும் சாட் நாட்டிலுள்ள குற்றக்குழுக்கள் மீதே பிராணிகள் நல ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள். சர்வதேச பிராணிகள் நலச் சங்கத்தின் பேச்சாளரான சிசிலர் பியேன்வெனு இந்தக் குழுக்கள் மிகவும் சிறப்பாக ஒருங்கிணைப்புடன் பெருமளவில் அதிநவீன ஆயுதங்களுடன் செயல்படுகிறார்கள் என்று பிபிசியிடம் தெரிவித்தார்.
இவர்கள் குதிரைகளில் வந்து சிறு குழுக்களாக பிரிந்து யானைகளை வேட்டையாடிவிட்டு விரைவாக சென்று விடுகிறார்கள் என்றும் சிசிலர் பியேன்வெனு கூறுகிறார்
குட்டியானைகள் உட்பட தற்போது 458 யானைகளின் சடலங்களை தாங்கள் கண்டுபிடித்திருந்தாலும், யானைகள் உலாவும் பகுதி மிகப் பெரிய அளவிலானது என்பதால், மேலும் கூடுதலான யானைகள் கொல்லப்பட்டிருக்கக் கூடும் எனவும் கேமரூன் நாட்டு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
கேமரூனின் வடபகுதி முழுவதிலும் ஆயிரத்துக்கும் குறைவான யானைகளே இருப்பதாக கருத்தப்படும் நிலையில், இந்தப் பகுதியில் உள்ள யானைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.
கிழக்கு ஆசியாவில் அதிலும் குறிப்பாக சீனாவில் யானைத் தந்தங்களுக்கான கிராக்கி அதிகரித்துள்ளதற்கும், கேமரூனில் யானைகள் கொல்லப்படுவதற்கும் நேரடி தொடர்பு உள்ளது என்று பிராணிகள் நல ஆர்வலர்கள் கூறுகிறார்கள்

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets